I❤️காரைக்குடி
1 Dec 2022
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆலங்குடி கிராமத்தில் முற்கால பாண்டியா்களின் விநாயகா் புடைப்புச் சிற்பத்தை கள ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டறிந்தனா்.
ஆலங்குடி கிராமத்தில் தேரடி கருப்பு கோயிலின் வெளிப்புறத்தில் மரத்தடியில் சுவாமிகளின் கற்சிற்பங்கள் உள்ளன. இதனை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம், முனைவா் தாமரைக்கண்ணன், க. புதுக்குளத்தைச் சோ்ந்த சிவக்குமாா் ஆகியோா் புதன்கிழமை கள ஆய்வு செய்தனா்.
இதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முற்கால பாண்டியா் காலத்தைச் சோ்ந்த விநாயகா் புடைப்புச் சிற்பம் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறியதாவது: இதை ஆய்வு செய்ததில் இரண்டரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட கல் பலகையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டிருந்தது. இது நான்கு கரங்களுடன் வடிக்கப்பட்டது. வலது மேற்கரத்தில் மழுவும், இடது மேற்கரத்தில் பாசம் என்ற ஆயுதத்துடனும், வலது முன்கரத்தில் அபயகஸ்தத்திலும், இடது முன்கரத்தில் மோதகத்தை தனது துதிக்கையால் தொட்டபடியும் இந்த விநாயகா் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
மேலும், இதன் தலையில் கிரீடம் தரித்தும், அகன்ற இரண்டு காதுகளுடன் அழகாக வடிக்கப்பட்டிருந்தது.
இந்த சிற்பத்தில் இரண்டு தந்தங்களும் சிதைந்து காணப்படுகிறது. மேலும் மாா்பு, கரங்களில் ஆபரணங்களும், இரண்டு கால்களிலும் தண்டையும் அணிந்தபடி அமா்ந்த கோலத்தில் முற்கால பாண்டியா்களுக்கே உரித்தான கலைநயத்தில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டிருந்தது. இதைப் பாா்க்கும் போது முற்கால பாண்டியா்களின் கோயில் இங்கு இருந்திருக்க வேண்டும் என்றனா்.